ஆன்லைன் மூலம் இந்திய இளைஞரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்
இந்திய மாநிலம் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை ஆன்லைன் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சட்டப்படி திருமணம் செய்துள்ளார்.
ஆன்லைனில் நடந்த திருமணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த இளைஞர் அர்பாஸ் என்பவருக்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரைச் சேர்ந்த அமீனா என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு, அந்த பழக்கம் காதலாக மாறியது. அதற்கு, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து, பாகிஸ்தானில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தடை செய்யப்பட்டது. பின்பு, இரு வீட்டாரும் ஆன்லைனில் திருமணம் செய்ய சம்மதித்தனர்.
இதனால், கடந்த 2 ஆம் திகதி காணொளி வாயிலாக ராஜஸ்தானில் உள்ள அர்பாஸ்க்கும், பாகிஸ்தானில் உள்ள அமீனாவுக்கும் முஸ்லீம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
விசா கிடைக்கும் என இருவீட்டாரும் நம்பிக்கை
இது குறித்து மணமகன் அர்பாஸ் தந்தை முகமது கூறுகையில், "இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இருந்தாலும் எங்களது உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். இப்போது, என் மகன் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளார். நாங்கள் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று எங்களது மருமகளை இந்தியாவிற்கு அழைத்து வருவோம்" என்றார்.
மணமகன் அர்பாஸ் கூறுகையில்,"பாகிஸ்தானின் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அதுமட்டுமல்லாமல், அங்கு திருமணம் செய்தால் இந்தியாவில் அந்த திருமணம் செல்லாது. மீண்டும் இந்தியாவில் திருமணம் செய்ய வேண்டும். இப்போது நாங்கள் ஆன்லைனில் திருமணம் செய்ததால் எங்களது திருமணம் செல்லும்" என்றார்.
மணமகளின் குடும்பத்தினர் கூறுகையில், "பாகிஸ்தானை சேர்ந்த பெண்களுக்கு மேற்கு ராஜஸ்தானில் உள்ள இளைஞர்களுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. மணமகள் அமீனா இந்தியா வர ஆர்வமாக இருக்கிறார். சட்டப்படி திருமணம் நடைபெற்றதால் விசா கிடைக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |