பிரச்சனைகளில் வாய்ப்பை பாருங்கள்
சமகாலத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் ஏராளமான எதிர்மறை சொற்களில் முக்கியமான சொல் தான் பிரச்சனை (problem) இந்த சொல்லை தினசரி உபயோகிக்காத மனிதர்களே கிடையாது என கூறினால் மிகையாகாது.
வேலைக்கு போனால் பிரச்சினை வீட்டுக்கு வந்தால் பிரச்சனை என்னடா வாழ்க்கை இது என அலுத்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.
பிரச்சனை என்று கூறியதும் ஒரு கதை நினைவிற்கு வருகிறது. நீண்ட நாட்களாக வேலை தேடி சோர்ந்து போன ஓர் இளைஞனுக்கு பல வருட போராட்டங்களுக்கு பின்பு பத்திரிகை ஆபீஸில் நிருபர் வேலை கிடைத்தது.
மிகவும் மகிழ்ச்சியுடன் முதல் நாள் வேலைக்கு செல்கிறான்! பத்திரிகை ஆசிரியர் அவனை அழைத்து இன்று சுதந்திர தினம் துறைமுகத்தில் கப்பல் படையை சேர்ந்த போர் கப்பல் ஒன்று வந்திருக்கிறது.
அதில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. "அங்கு போய் செய்தி சேகரித்து வா "என அவரை அனுப்பி வைக்கிறார். முதல் நாள் வேலையில் முதலில் வழங்கப்பட்ட பொறுப்பு எனவே விரைந்து ஆசிரியர் சொன்ன துறைமுகத்திற்கு செல்கிறான்.
அன்று மாலை சுதந்திரதினச் செய்தி சேகரிக்க கோட்டை, ஜனாதிபதி அலுவலகம், கட்சி அலுவலகம் என நாலா திசைகளுக்கும் சென்ற நிருபர்கள் அவரவர் சேகரித்த செய்திகளை வேகவேகமாக எழுதுகின்றார்கள்.
ஆனால் அந்த இளைஞன் மட்டும் எதுவும் எழுதாமல் சோகமாக உட்கார்ந்திருந்தான், இதனை கவனித்த சக நிருபர் ஒருவர் "நீ ஏன் எதுவும் எழுதவில்லை?" என கேட்கிறார்.
அதற்கு அந்த இளைஞன் என் கெட்ட காலம் “நான் உப்பு விற்க போனால் மழை பெய்யிது மாவு விற்க போனால் காற்றடிக்கிது“ எனக்கு வழங்கப்பட்ட முதல் பொறுப்பிலேயே பெரிய பிரச்சினை.
கப்பல் படையில் நடக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை கவர் செய்ய சொல்லித்தான் ஆசிரியர் என்னை அனுப்பினார். என் கஷ்ட காலம்... கப்பலில் அந்த கொண்டாட்டம் நடக்கவில்லை.
அதனால் செய்தி இல்லை என்று ஆசிரியரிடம் எப்படி சொல்வது என பயமாக இருக்கிறது என புலம்ப ஆரம்பித்தான். " அப்படியா! கப்பலில் ஏன் சுதந்திரதின கொண்டாட்டம் நடக்கவில்லை? " என சக நிருபர் சளைக்காமல் கேட்டார்.
கப்பலில் ஓட்டை இருந்திருக்கிறது, சுதந்திரதின கொண்டாட்ட ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லையாம். திடீரென ஓட்டை பெரிதாகி கடல் தண்ணீர் குபுகுபுவென புகுந்து காப்பலே மூழ்கும்படி ஆகிவிட்டது. அதனை தடுப்பதில் பெரிய படையே பாடுபட்டது.
இப்படியிருக்க சுதந்திரதின கொண்டாட்டம் எப்படி நடக்கும்? சக நிருபர் ஷாக் அடிச்ச மாதிரி எழுந்து நின்றுவிட்டார். அடப்பாவி! இது தானே முதல் பக்க செய்தியாக வரவேண்டும் என சொல்லிவிட்டு முழு விபரங்களையும் திரட்ட அந்த நிருபர் ஓடினார்.
எதை பிரச்சினை என்று நினைத்து அந்த இளைஞன் கவலைபட்டானோ அது அவன் திறமையை நிரூபிக்க கிடைத்த தங்கமான வாய்ப்பு அதை தான் கோட்டைவிட்டிருக்கிறான். இப்படிதான் நம்மில் பலர் நமக்கு கிடைத்த வாய்ப்புகளிலும் பிரச்சினைகளை தேடிக் கொண்டிருக்கிறோமே தவிர ஒவ்வொரு பிரச்சனைகளிலும் உள்ள வாய்ப்புகளை யாரும் கவனிப்பதில்லை.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிடப்பட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை, அது எதிர்பாராமல் வருகின்ற வாய்ப்புகளின் ஊர்வலம், இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கை என்பதே ஒரு வாய்ப்பு தான்.
இதை புரிந்துக்கொள்ளாதவர்கள் தான் பிரச்சனைகளின் போது இறைவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என காத்துக்கொண்டிருப்பார்கள்.
மூடிய கதவை திறக்க பெரும்பாலானவர்கள் முயற்சிப்பதே இல்லை. கதவு என்பதே மூடுவதற்கும் திறப்பதற்கும் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடுகிறோம்.
அற்ப காரணங்களுக்காக பெரிய வாய்ப்புகளை இழந்துவிடுகிறோம். வரலாற்றில் இடம்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தோமானால் அவர்கள் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு அதிலுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
உதாரணமாக தோமஸ் அல்வா எடிசன் மின்குமிழை கண்டுப்பிடிக்க 1000 இற்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்த பின்னர் தான் அவரால் மின்குமிழை கண்டுப்பிடிக்க முடிந்தது. அவர் தன்னுடைய 1000 முயற்சிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளை பிரச்சனையாக பார்க்காமல் தன்னை பண்படுத்திக்கொள்ளவும் தவறை திருத்திக்கொள்ளவும் கிடைத்த வாய்ப்புக்களாக பார்த்தமையாலேயே அவரால் வெற்றியடைய முடிந்தது.
பிரச்சனை இல்லாத யாரும் உலகில் இருக்க முடியாது, ஆனால் அதனை தனக்கு பாடம் கற்பிக்கும் ஆசானாக நினைத்து பிரச்சனைகளில் ஒழிந்திருக்கும் வாய்ப்புகளை பார்க்க கற்றுக்கொண்டுவிட்டோமானால் பிரச்சினைகளை காரணம் காட்டுவதை விட்டுவிட்டு அதனை படிக்கல்லாக மாற்றி வாழ்வில் முன்னேறி செல்ல பழகிவிடுவோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |