ஒமிக்ரானை சாதாரணமா நினைச்சிடாதீங்க: பாதிக்கப்பட்ட மருத்துவரின் பகீர் தகவல்
ஒமிக்ரான் வைரஸை அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொரொனா மற்றும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் , அதைத் தொடர்ந்து டெல்லியில் மக்கள் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல தெலங்கானா, தமிழகம், குஜராத், கேரளா, ஹரியான, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி ஊரடங்கை பிறப்பித்துள்ளன.
இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை ஆரம்பமாகியுள்ள நிலையில் இது பெரும்பாலும் ஒமிக்ரான் வைரஸால் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஓமிக்ரான் மிகவும் தொற்றுநோயாக நம்பப்படுகிறது எனவும், உலக அளவில் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டை லேசானது என்று நிராகரிக்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான தன்மய் மோதிவாலா ஓமிக்ரானை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
எய்ம்ஸில் குழந்தை மருத்துவத் துறையில் பணிபுரியும் இவர், புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஐசியுவில் நோயாளிக்கு சிகிச்சையளித்த பிறகு எனக்கு லேசான தலைவலி, ஆழ்ந்த பலவீனம் ஏற்பட்டது எனவும் இது ஒரு முக்கிய அறிகுறி என்பதால் தான் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டேன் என்றார்.
மூன்றாவது அலையில் மக்கள் தங்கள் பங்கை கடமையாக கருதி செய்ய வேண்டும் எனக் கூறிய அவர் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கக் கோரியுள்ளார்.
மேலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சிலருக்கு, அறிகுறிகள் லேசாக இருக்கலாம் எனவும், ஆனால் ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது எனவும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம், ஆனால் அவர்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.