பாதுகாப்பிற்காக முதியவர் செய்த காரியம்! காலையில் சடலமாக கிடந்த சோகம்
சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பிற்கு போடப்பட்ட மின் இணைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.

மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்
சமீபத்தில் வழக்கம்போல் இரவில் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கியவர் மறுநாள் காலை மின் இணைப்பைத் துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டுள்ளார்.
அப்பொழுது மின்சாரம் பாய்ந்ததில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தான் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி பொலிசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.