குவளைக்குள் தலைகீழாக பாட்டியின் சடலம்! சொந்த பேத்தி அரங்கேற்றிய கொடூரம்
தஞ்சை மாவட்டத்தில் சொந்த மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவளையில் பாட்டியின் சடலம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி(55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன், மூன்று மகள் உள்ளனர்.
இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். மகள்கள் திருமணாகி சென்று விட்டனர்.
இந்நிலையில் செல்வமணி அக்கம் பக்கத்தினரிடம் திருச்செந்தூர் போவதாக 24ம் தேதி கூறியுள்ளார். அதன் பின்பு வீடு பூட்டியே கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரது மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்துள்ளனர்.
ராஜலட்சுமி வந்து பார்த்ததும் வீட்டில் துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது செல்வமணி பித்தளை குவளையில் தலைகீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
பின்பு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் செல்வமணியின் பேத்தி ஜெயலட்சுமி(28) முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கிய நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.
செல்வமணியின் மகள் கீதா வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் பாட்டிக்கு மாதந்தோறும் பணம் அனுப்பி வைத்துள்ளார். கீதாவின் மகள் ஜெயலட்சுமி பாட்டியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு, கடந்த 23ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தில் ஜெயலட்சுமி பாட்டியை கீழே தள்ளியதால், தலையில் ரத்தம் வழிந்துள்ளது. பின்பு ஜெயலட்சுமி பாட்டியை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து, பித்தளை குவளையில் அடைத்து வைத்ததும் அம்பலமாகியுள்ளது.