ஓலா ஸ்கூட்டருக்கு அடுத்து களத்தில் இறங்கும் ஓலா எலெக்ட்ரிக் கார்- ஸ்பெஷல் என்ன? குஷியில் வாடிக்கையாளர்கள்!
இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சக்கை போடும் நிலையில், அந்நிறுவனம் அடுத்ததாக ஓலா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி என கூறிய தகவல் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஓலா எஸ்1 என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படப்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதாலும், பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஓலா ஸ்கூட்டர் இந்தியா விற்பனையில் சக்கை போடும் நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பாவிஷ் அகர்வால் தனது பதிலில் இதனை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறியதில்., “2 மாதங்களுக்கு முன்பு வரை என்னிடம் சொந்தமாக கார் இல்லை. தற்போது ஹைப்ரிட் கார் வைத்துள்ளேன். அடுத்த கார் 2023- ம் ஆண்டு எலெக்ட்ரிக் காராக இருக்கும். அது ஓலாவின் எலெக்ட்ரிக் கார்'” என பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார்.
பாவிஷ் அகர்வாலின் இந்த பதில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்த வரவேற்பை போன்றே எலெக்ட்ரிக் காருக்கும் மக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வரும் 2023-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.