சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை செய்வது எப்படி?
தானிய வகைகளில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தப்படியாக சிறந்து விளங்குவது ஓட்ஸ் தான்.
ஓட்ஸில் நார்ச்சத்து, கனிமச்சத்து, விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த ஓட்ஸ் ஆரோக்கியமான சத்துக்களை உள்ளடக்கிய தானிய வகையைச் சேர்ந்ததால், இது அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது.
மேலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மிகவும் சிறந்த உணவாக இருந்து வருகிறது.
தேவையான பொருள்கள்
ஓட்ஸ் - 3 கப்
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொண்டு, ஓட்ஸை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து, அதை பொடி போல் அறைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில், சிறிதளவு வெந்நீர் ஊற்றி, அதனிடன் வறுத்து அறைத்த ஓட்ஸ் பொடி, தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய ஓட்ஸ் மாவில், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, தோசைக் கல்லில் மெல்லிய தோசை போல ஊற்றி வேகவைத்து, எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி.