மிதிவண்டியை விட மெதுவான வேகமா! இந்தியாவின் மிக மெதுவான ரயில் எதுன்னு தெரியுமா?
பொதுவாக இந்தியா உலகின் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது.
பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், தற்போது வந்தே பாரத், தேஜஸ், சதாப்தி ஆகிய அதி வேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுன்றி , 2030 ஆம் ஆண்டில், மும்பை மற்றும் அகமதாபாத் இடையே மணிக்கு 308 கிமீ வேகத்தில் ஓடும் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை இயக்கும் நோக்கில் பணிகளும் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய ரயிலாகவும், அதே நேரம் பயணிகள் அதிகம் விரும்பும் ரயிலாகவும் ஒரு ரயில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், அதுவும் தமிழகத்தில் தான் இந்த ரயில் இயங்குகின்றது. மொத்தமே 46 கிலோ மீட்டர் தூரத்தை அடையை இந்த ரயிலில் 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமாம் இது குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விபரங்களையும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் இவ்வளவு குறைவான வேகம்?
மணிக்கு 10 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், மொத்தமுள்ள 46 கிமீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது.
நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் பலரது மனதிலும் நீங்கா இடம்பிடிப்பது மலை ரயில் தான். பலரையும் வசியப்படுத்தும் இந்த ரயில் நீலகிரியின் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் கனவு வாகனமாக காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.

இந்தியாவின் வேகமான ரயிலை ஒப்பிடுகையில், 20 மடங்கு குறைவான வேகத்தில் சென்றாலும், மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் வழியாக சென்று, 208 வளைவுகள், 16 சுரங்கபாதைகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பாலங்களை குறித்த ரயில் கடக்கிறது.
கூர்மையான வளைவுகள் மற்றும் செங்குத்தான மலை சரிவு காரணமாகவே இந்த ரயில் இவ்வளவு குறைந்த வேகத்தில் பயணிக்கின்றது.

பழங்கால நீராவி எஞ்சின்கள் மூலம் இயங்கும் இந்த ரயிலை, 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |