இரவில் தூங்கும் முன்பு இதையெல்லாம் தவறியும் சாப்பிடாதீங்க: உயிருக்கே உலை வைக்கும்
நம்முடைய அன்றாட செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் அவசியம். ஆரோக்கியமாக, துடிப்பான வாழ்க்கைக்கு உணவு எப்படி அவசியமோ அது போலவே தூக்கமும் அவசியமானது.
தூங்கச் செல்வதற்கு முன்பு சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த உணவுகளைக் குறித்து தற்போது காணலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அதாவது இரவு உணவாக அதிக காரம், மசாலா உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம். அது உணவு செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை பாதித்து தூக்கத்தை கெடுக்கும். எனவே, இரவு மிக எளிதில் செரிமானம் ஆகும் உணவையே எடுக்க வேண்டும்.
எண்ணெய்யில் பொறித்த, ஃபாஸ்ட் ஃபுட் இரவில் வேண்டாம். இதுவும் செரிமானத்தை தாமதப்படுத்தும். அதிக புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் செரிமானத்தை பாதிக்கும். எனவே, இரவில் இத்தகைய உணவை தவிர்க்க வேண்டும்.
அதே போன்று சீஸ், மயோனைஸ் போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஷாவர்மா, பர்கர், பீட்ஸா போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டியதே.
இரவில் காபி, ஐஸ் கிரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதில் உள்ள அதிகப்படியான காஃபின், சர்க்கரை தூக்கத்தை கெடுத்துவிடும். தூங்கச் சென்றாலும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. அதே போன்று சர்க்கரை அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
சாக்லெட்டும் சாப்பிடக் கூடாது. சாக்லெட்டிலும் அதிக அளவில் காஃபின் உள்ளது. மேலும் சாக்லெட் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வது பற்களின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.
ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதற்காக தூங்கச் செல்வதற்கு முன்பு அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம். அது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடலாம். இதனால் தரமான தூக்கம் கிடைப்பது பாதிக்கப்படலாம்.
செர்ரி, தேன், வாழைப்பழம், பாதாம் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். இவை தூக்கத்தை தூண்டுபவையாக, ஆழ்ந்த, தரமான தூக்கம் கிடைக்கச் செய்பவையாக இருக்கும்.