குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும் தமிழன்! வெற்றியை கொண்டாடும் நெட்டிசன்கள்
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை கொண்டாடும் நெட்டிசன்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, பல கட்ட சுற்று முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆரம்பம் முதல் தி.மு.க கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இதில் திமுக கூட்டணி 166 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பல மாவட்டங்களை தி.மு.க கூட்டணியே முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் தி.மு.க வேட்பாளர்கள் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வெற்றியை சமூக வலைதங்களில் பலரும் கொண்டாடி பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐ சார்பில் போட்டியிட்ட மாரிமுத்துவின் வெற்றியை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தி.மு.க கூட்டணியின் சி.பி.ஐ கட்சி வேட்பாளர் மாரிமுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சுரேஷ் குமாரை விட 29 ஆயிரத்து 102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சி.பி.ஐ வேட்பாளர் மாரிமுத்துவின் வீடு பெரிய வசதிகளற்ற கூரை வீடுதான்.
முன்னதாக மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கிக்கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டு இருந்தது அனைவர் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றது.
பூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இவரின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.