நேபாள வெள்ளம்: ஆபத்து வருவதற்கு முன் சுதாரித்த ஆசிரியர்: காப்பாற்றப்பட்ட 1,643 உயிர்கள்!
எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலைகளில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவுகூட எத்தனை உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த ராஜேந்திர ததாபி ஒரு சிறந்த உதாரணமாகியிருக்கிறார்.
கடந்த 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கோரமான இயற்கைப் பேரிடருக்கு மத்தியில், தனது சமயோசிதமான சிந்தனையாலும், துரிதமான நடவடிக்கையாலும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் ராஜேந்திர ததாபி.

தலைமையாசிரியரின் விரைவான முடிவு
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக ராஜேந்திர ததாபி பணியாற்றி வருகிறார்.
பள்ளிக்கு அருகே பாயும் திரிசூலி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் குறித்து தன்னுடைய நண்பர் மூலம் தகவல் கிடைத்தவுடன், நிலைமையின் ஆபத்தை உணர்ந்த ததாபி, அடுத்த நொடியே செயல்படத் தொடங்கினார்.
முதலில் பள்ளி மணியை அடித்து, பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் தாமதமின்றி பாதுகாப்பான, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு நின்றுவிடாமல், பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வராமல் அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்பாக இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில், ஒரு பள்ளிப் பேருந்து மட்டும் திரிசூலி ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நிலைமையை அறிந்த ததாபி, அந்தப் பேருந்தின் ஓட்டுநரையும் உடனடியாகத் தொடர்புகொண்டு, எப்படியாவது பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளார்.
அவரது அந்த ஒரு தொலைபேசி அழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த சம்பவம் உணர்த்தியது. பேருந்து பாலத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மூன்று அடுக்குகளைக் கொண்ட பள்ளிக் கட்டடமே அடுத்த சில நிமிடங்களில் வெள்ளநீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டது.
ஆபத்து வருவதற்கு முன்பே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியதுடன், பள்ளிப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்களையும் உரிய நேரத்தில் எச்சரித்து காப்பாற்றியிருந்தார். இதன் மூலம், 1,643 மாணவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.
ஒரு பேரிடர் நேரத்தில் பதற்றமடையாமல், கிடைத்த தகவலை சரியாகப் புரிந்துகொண்டு, சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்த ராஜேந்திர ததாபியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
சில நேரங்களில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் சில நிமிடங்களாக மட்டுமே இருக்கலாம். அந்த சில நிமிடங்களில் எடுக்கப்படும் சரியான முடிவுதான் நூற்றுக்கணக்கான உயிர்களின் விதியை மாற்றியுள்ளது.
அந்த வகையில், ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழிக்கு ராஜேந்திர ததாபியின் செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |