நடிகை நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்! சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி
இயக்குநர் விக்னேஷ்சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியிடம் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா விக்கி ஜோடி
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்
தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். அவரிடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.