இன்று தொடங்கிய நவராத்திரி: ஒன்பது நாட்கள் கொலு வைத்து வழிபடுவது எப்படி?
சிவனை வழிபடும் இரவிற்கு சிவராத்திரி என்றும், பெருமாளை வழிபடும் இரவிற்கு வைகுண்ட ஏகாதசி என்றும், அம்மனை(அம்பிகை) வழிபடும் ஒன்பது இரவிற்கு நவராத்திரி என்றும் கருதப்படுகின்றது. மேலும் இந்து மதத்தில் இதனை திருவிழாவாகக் கடைபிடித்து வருகின்றனர்.
ஏன் அம்பிகைக்கு நவராத்திரி?
அம்பிகை என்பவள் அபிவிருத்தி செய்யக்கூடியவள், விஸ்தரிப்பு செய்பவள். பெருக்குபவள். இப்படிப்பட்ட மூன்று பெண் தெய்வங்கள் சேர்ந்த அம்பிகைக்கு நவராத்திரி கொலு எப்படி வைப்பது.
கொலு வைப்பது எப்படி?
நவராத்திரியில் குறைந்தது 3 என 11 படிகள் வரை வைக்கும் பழக்கமுண்டு. வீட்டின் அளவைப் பொறுத்து படிகளின் நீளமும் அகலமும் கூடும்.
கொலு வைத்து நவராத்திரி நாளில் வழிபட்டால் அந்த வீட்டில் சர்வ மங்கலமும் பொங்கும் என்பது ஐதீகம். இதனால் நடுத்தர வகுப்பு மக்கள் கூட தம்மால் இயன்ற அளவுக்கு படிகள் அமைத்து நவராத்திரியைக் கொண்டாடுவார்கள்.
மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிஷாசூரனை வதைத்ததைத்தான் நவராத்திரி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்தாண்டு நவராத்திரி திருவிழா இன்று இனிதே தொடங்குகிறது.
ஆதிபராசக்தியின் அருளால் மும்மூர்த்திகள் தொடங்கி ஈ, எறும்பு உள்ளிட்ட சகலமும் படைக்கப்பட்டு அவளால் படி நிலைகளாக வைக்கப்பட்டு காக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்தவே நவராத்திரி நாளில் கொலு பொம்மைகள் படிப்படியாக வைக்கப்படுகின்றன.
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மனிதனின் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக தன்னிலையில் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலுப் படிகள் அமைகின்றன. மனிதன் படிப்படியாக முன்னேறி தேவ நிலையை அடையலாம் என்பதும் படிகளின் தத்துவம் உணர்த்துகின்றன.
ஊர்வன, பறப்பன என்று கீழ்ப்படியில் தொடங்கி, விலங்குகள், மனிதர்கள், முனிவர்கள், மகான்கள், சித்த புருஷர்கள், தேவர்கள், அவதாரங்கள், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர் என மேல்நோக்கி அமைப்பது கொலுவின் வழக்கம்.
முதல் படி:
மரம், செடி, கொடி ஆகிய ஓரறிவு படைப்பை முதல் படியில் வைக்க வேண்டும்.
இரண்டாம் படி:
ஈரறிவு உயிரனங்கள் வைக்கலாம். உதாரணம் நத்தை, சங்கு இவை எல்லாம் ஈரறிவு.
மூன்றாம் படி:
கரையான், எறும்பு இவை எல்லாம் 3 அறிவு உயிரினங்கள்.
நான்காம் படி:
நண்டு, வண்டு, தும்பி உள்ளிட்ட சிறிய வகை பறப்பன, ஊர்வன போன்ற 4 அறிவு உயிரினங்கள்.
ஐந்தாம் படி:
பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம்.
ஆறாம் படி:
மனிதர்கள், திருமணங்கள், நடன பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாம் படி:
உயர்ந்த சித்தர்கள், மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். சாய்பாபா, விவேகானந்தர், வள்ளலார், மகா பெரியவர் போன்ற உயர்ந்தவர்களை வைக்கலாம்.
எட்டாம் படி:
இறைவனின் அவதாரங்களை வைக்கலாம். தசாவதாரம், அஷ்ட லட்சுமியர், தத்தாத்ரேயர் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படி:
ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், முருகப்பெருமான், பூரண கலசம், பிள்ளையார் பொம்மையும் வைக்கலாம்.
இவ்வாறு கொலு வைப்பது மட்டுமின்றி இதற்காக 9 நாட்கள் கண்டிப்பாக பூஜை செய்து நைவேத்தியமும் செய்ய வேண்டும்.