கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி மிளகு வறுவல்! சுலபமாக செய்வது எப்படி?
பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்களின் சமையல் என்பது தனி ருசி தான். ஆம் அவர்கள் வைக்கும் சைவம், அசைவம் என இரண்டிலும் சுவை மட்டுமின்றி, வாசனையும் ஊரே மயக்கும் அளவிற்கு இருக்கும்.
வார நாட்களில் பரபரப்பாக வேலைகளை முடித்துவிட்டு ஞாயிறன்று விடுமுறை எடுக்கும் நாம் வாய்க்கு ருசியாக அசைவ உணவு சாப்பிடுவதை தான் விரும்புகின்றோம்.
அதிலும் சிக்கனை விரும்பாத அசைவ பிரியர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆம் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகளே சிறந்தது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், பிராய்லர் கோழிகளை வாங்குவதற்கே போட்டி போட்டு நிற்கின்றனர்.
இங்கு சுவையான நாட்டுக்கோழி மிளகு வறுவல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுக் கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 10 பல்
மிளகு - 4 ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
மஞ்சள், உப்பு மற்றும் நல்லெண்ணெய் - தேவையான அளவு
வர மிளகாய் - 5
தனியா -2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 4
கருவேப்பிலை, மல்லித்தழை தேவையான அளவு
செய்முறை
நாட்டுக்கோழியினை நன்கு வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தக்காளி வெங்காயத்தினை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் கொடுக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, வரமிளகாய், தனியா, தேங்காய் துருவல் போன்றவற்றை லேசாக வறுத்து, அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போன்றவற்றை சேர்த்து, பின்பு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு நாட்டுக் கோழியை சேர்த்து நன்கு வதக்கி விடவும். தொடர்ந்து அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் நன்றாக பச்சை வாசனை போகும் வதக்கிவிட்டு, இதனுடன் தேவையான அளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
இதனுடன் வறுத்து அறைத்து வைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து பின்பு இறங்கவும். இறுதியாக கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து விடவும். சுவையான மிளகு வறுவல் ரெடி...