உலக பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன்! திருவிழாவை நேரலையில் காண (வீடியோ காட்சிகள்)
உலக புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.
புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில் உற்சவத்திற்கு வருகை தருவது வழக்கம்.
மிகவும் பிரபல்யம் வாய்ந்த இந்த கோவில் குறித்து உலகில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என கூறினால் மிகையாகாது.
கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில்.
கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில் வரலாறு
தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது.
'யாழ்ப்பாண வைபவ மாலை', 'கைலாய மாலை' ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.
இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை.
கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் காணப்படுகின்றது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேல் தான் இந்தக் கோயிலில் தெய்வமாக கருதப்படுகின்றது.
திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர்.
வருடம்தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் 27 நாள்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த 6ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆவணி மாதம் அமாவாசையன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும்.
24ஆம் நாள் தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெறும். திருவிழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
கோவிலின் கலை அம்சம்
மாதம்தோறும் கிருத்திகையன்று வள்ளி, தெய்வானை இருபுறமும் இருக்க, வேலை சிறப்பாக அலங்கரித்து வழிபடுகின்றனர்.
மேலும் தைப்பூசம், மார்கழி திருவாதிரை, கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன. கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திய ஆறுமுக நாவலருக்கு நினைவு சின்னமாக மணிமண்டபம் ஒன்றும் கோயிலுக்கு இடப்புறம் அமைந்துள்ளது.
மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்தநிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது.
பூஜை நேர விபரம்
மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன.
இந்த மண்டபத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்கள் பண்ணோடு கற்றுக் கொடுக்கின்றனர். கோயிலில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் திருநல்லூர் முருகன் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. முருகப்பெருமானுக்கு ஊஞ்சல் பாட்டுப் பாடி, சிறிய மஞ்சத்தில் வைத்துத் துயில்கொள்ளச் செய்கின்றனர்.
பள்ளியறை பூஜையைத் தரிசிக்க பக்தர்கள் திரளாக வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டால், மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது மெய்.