வீட்டில் ராகி மாவும், முருங்கை கீரையும் இருக்கா? அப்போ இப்படி அடை செய்ங்க
வீட்டில் இருக்கும் ராகி மாவும் முருங்கை கீரையும் வைத்து ஒரு சத்தான சுவையான அடையை செய்யலாம்.
அடை ரெசிபி
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான காலை உணவு சாப்பிட்டு ப bored-ஆகிவிட்டீர்களா? தினமும் இட்லி, தோசையோடு ஒரே சட்னி சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்துகிறதா?
அப்படி என்றால், இன்று சற்று வித்தியாசமான, சத்தான மற்றும் ருசியான ஒரு டிபன் வகையை முயற்சி செய்யலாம் அது தான் முருங்கைக்கீரை ராகி அடை.
வீட்டில் இருக்கும் ராகி மாவும், முருங்கைக்கீரையும் வைத்து செய்யக்கூடிய இந்த எளிய உணவு, சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிரம்பியதொரு மாற்று காலை உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அடைக்காக
- ராகி மாவு – 2 கப்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
- சீரகம் – 1¼ டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- எண்ணெய் – 1¼ டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 25 (நறுக்கியது)
- முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
- துருவிய தேங்காய் – ½ கப்
தேங்காய் சட்னிக்காக
- துருவிய தேங்காய் – 1 கப்
- பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- இஞ்சி – சிறிய துண்டு
- பச்சை மிளகாய் – 4
- தண்ணீர் – சிறிது
சட்னி தாளிக்க
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – ½ டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வரமிளகாய் – 1
செய்முறை
இடிகல்லில் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்புடன் நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தட்டிய விழுதையும் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். அதில் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக சுருங்கும் வரை வதக்கவும். பின் தேங்காயும் சேர்த்து நன்கு வதக்கி, கலவையை தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ராகி மாவுடன் உப்பும், வதக்கிய கலவையும் சேர்த்து கைகளால் பிசைந்து, தேவையான அளவு நீர் ஊற்றி அடை பதத்திற்கு பிசைக்கவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு மாவை எடுத்து அடை போன்று தட்டிப் போட்டு, எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். பின், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் தாளித்து சட்னியில் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் அடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
