செரிமானத்தை சீர்படுத்தும் முருங்கைக்கீரை அடை..! கமகம வாசனையுடன் எப்படி செய்றாங்க தெரியுமா?
செரிமான பிரச்சினையுள்ளவர்கள் தானிய வகைகளை அதிகமாக சாப்பிட்டால் எந்த விதமான மருந்துகளும் இல்லாமல் பிரச்சினை குணமாகும்.
ஏனெனின் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து ஆகிய ஊட்டசத்துக்கள் தானியங்களில் அதிகம் இருக்கின்றன.
முளைக்கட்டிய பயறு, கோதுமை, கடலை ஆகிய தானியங்களில் சாப்பாடுகள் செய்து சாப்பிடும் போது உடல் வளர்ச்சி அதிகமாகின்றது.
மேலும் ஒல்லியாக இருப்பவர்கள் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். தானியங்கள் அதன் எடை மற்றும் வடிவங்களுக்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் முளைகட்டிய சிறுதானிய வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரை அடை எவ்வாறு செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
அடைக்கு தேவையான பொருட்கள்
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ தோலுடன்கூடிய முழு கருப்பு
உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 10 பல்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் அடைக்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் முருங்கைக் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடை செய்வதற்கு முன்னர் கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை ஆகிய தானியங்களை முதல் நாள் இரவு ஊற வைத்து விட வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீரை வடிக்கட்டி விட்டு வெள்ளை துணியால் கட்டி வைத்து விட வேண்டும். மாலையில் பார்க்கும் போது முளைக்கட்டி இருக்கும்.
அதன் பின்னர் வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து சுமாராக 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
4 மணி நேரத்திற்கு பின்னர் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை அடை ரெடி!