செவ்வாய்கிழமை முருகனுக்கு விரதம் இருப்பதால் உண்டாகும் நன்மைகள்
தமிழ் கடவுளான முருகன் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார், சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார்.
அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
இவருக்கு உகந்த விரதங்களில் மூன்று விரதங்கள் பிரதானமாக சொல்லப்படுகிறது.
அவையாவன,
வார விரதம்
நட்சத்திர விரதம்
திதி விரதம்
இதில் வார விரதம் முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த பதிவில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி? என்னென்ன பலன்களை பெறலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வார விரதம்
செவ்வாயன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு முருகன் ஆலயத்துக்கு சென்று மனதார வழிபட வேண்டும்.
வீட்டிற்கு திரும்பியதும் வெறும் பழம், பழச்சாறுகள் மட்டுமே அருந்தி முருகனை மனதார நினைத்து பயபக்தியுடன் விரதம் மேற்கொள்ளவும்.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மீண்டும் ஒருமுறை முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்யவும்.
இப்படி தொடர்ந்து 9 செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பலன்கள்
- செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் அதனால் உண்டாகும் பாதிப்புகள் நீங்கி விடும்.
- சொந்த வீடு இல்லாதவர்கள் பயபக்தியுடன் விரதம் இருந்தால் யோகம் உண்டாகும்.
- ஜாதக ரீதியிலான கோளாறுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும்.
- சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சனைகள் இருந்தால், தடைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும்.
குறிப்பு- வார விரதம் இருக்கும் போது அன்னதானம் செய்து வந்தாலும் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கப்பெறும்.