மொறுமொறுப்பான வெஜிடபிள் கட்லெட் - செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில்!
Chef Venkatesh Bhat's Delicious Vegetable Cutlet Recipe : குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், ஏதாவது சுவையான சிற்றுண்டி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?
அப்படிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய, சத்தும் சுவையும் நிறைந்த வெஜிடபிள் கட்லெட் செய்முறை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

இது பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் தனது தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய ஒரு பிரபலமான ரெசிபி.
வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் கீரை, பனீர் மற்றும் காய்கறிகளின் கலவையுடன் மென்மையாகவும் இருக்கும் இந்தக் கட்லெட்டை ஒரு முறை சாப்பிட்டால் பின்னர் அடிக்கடி செய்வீர்கள். இா்போது இந்தச் சுவையான வெஜிடபிள் கட்லெட்டை எப்படித் தயாரிப்பது என படி முறைகளாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முளை கீரை (Spinach) – 1 கட்டு
உருளைக்கிழங்கு – 1 பெரியது
துருவிய பனீர் – 1 கப் (விருப்பப்பட்டால்)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – ½ தேக்கரண்டி
மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
பாங்கோ பிரெட் தூள் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மசித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கீரையைத் தண்டிலிருந்து பிரித்து நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பனீரையும் நன்றான துருவி தனியாக வைக்கவும்.பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் நன்றாகப் பொரிந்து வாசனை வந்ததும் நறுக்கிய பூண்டைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய கீரையையும் துருவிய பனீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இந்தக் கலவையை நன்றாக ஆறவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஏற்கனவே மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஆறிய கீரை, பனீர் கலவையைச் சேர்த்து அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகப் பிசையவும்.
பின்னர் சிறிய உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் லேசாகத் தட்டி கட்லெட் வடிவத்தில் தட்டையாக்கி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
மைதா மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூளைத் தயாராக வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு கட்லெட்டையும் முதலில் மைதா கரைசலில் நனைத்து, பின்னர் பிரெட் தூளில் நன்றாகப் புரட்டிக்கொள்ள வேண்டும். எல்லா கட்லெட்டுகளையும் இதே முறையில் தயார் செய்து வைக்கவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருந்து சற்று அதிகமான சூட்டில் காயவிடவும். எண்ணெய் சூடானதும் கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
பின்னர் எண்ணெயை வடித்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.அவ்வளவுதான்,சுவையான, மொறுமொறுப்பான கீரை பனீர் கட்லெட் தயார். இதனை நீங்கள் விரும்பிய கீரையை பயன்படுத்தி செய்யலாம். ஆனால் செஃப் வெங்கடேஷ் பட் முளை கீரையை பயன்படுத்தி தான் செய்தார் என்பது குறிப்பிடத்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |