கர்நாடக இசையின் ஜாம்பவான் எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா! நாளை தொடங்கும் படப்பிடிப்பு!
பான்-இந்தியன் நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, அவரது திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயம் தொடங்கவுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தைப் படமாக்கும் முயற்சியில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்குகிறார்.இவர் ஏற்கனவே ஜெர்ஸி மற்றும் கிங்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதியாக ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

கமல் ஹாசன் தொடங்கி வைக்கும் படப்பிடிப்பு!
இந்நிலையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான செப்டம்பர் 16-ஆம் தேதி, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது.
சிறப்பம்சமாக, உலகநாயகன் கமல் ஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பான்-இந்திய அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ராஷ்மிகா, இந்தப் படத்தின் மூலம் இன்னொரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.