குழந்தைகளுக்கு உணவை கொடுத்துவிட்டு பட்டினி கிடந்த தாய்... உயிருக்கு போராடும் அவலம்
லாக்டவுன் காலத்தில் வேலையில்லாமல் கிடைத்த உணவை குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்துவிட்டு பட்டினி கிடந்த தாய் தற்போது உயிருக்கு போராடி வருகின்றார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரை சேர்ந்தவர் வீராசாமி- உஷா தம்பதி. இவர்களுக்கு பாலா, அன்பு என்ற இரு ஆண் குழந்தைகளும் தரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி மனைவியை விட்டு பிரிந்து சென்ற நிலையில் வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காலங்களில் பல வீடுகளில் வேலை கிடைக்காததால், கிடைத்த உணவினை தனது மூன்று குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்துவிட்டு விட்டு பட்டினியாக இருந்துள்ளார் உஷா.
பல நாட்களாக தண்ணீர் மட்டுமே இவரது உணவாக இருந்த நிலையில், இவரது நிலை மோசமானதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் சமூகஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் குறித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் எந்தமுன்னேற்றமும் அடையவில்லை என்று வெறும் பால் மட்டுமே அவரால் அருந்த முடிகின்றது என்று கூறப்படுகின்றது.
மேலும் நீண்ட நாட்கள் பட்டினியாக இருந்ததால், அவரது குடல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவிசெய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.