தாய் கூறிய ஒற்றை வார்த்தை! பைக்கில் தாயுடன் இந்தியாவையே வலம்வரும் நபர்
இந்தியாவில் மகன் ஒருவர் தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
தாய் கூறிய ஒற்றை வார்த்தை
இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணகுமார் என்ற நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றில் தாயையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வருகின்றார்.
இந்த தாயும் மகனும், இதுவரையில் 61,527 கிலோமீட்டர்கள் வரையில் தூரம் பயணம் செய்துள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் அவர் இவ்வாறு ஸ்கூட்டரில் இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகின்றார்.
10 பேரைக் கொண்ட தமது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த தாய் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என கிருஷ்ணகுமார் தெரிவிக்கின்றார்.
ஒரு தடவை அருகாமையில் இருக்கின்ற பெரிய கோயில்களை கூட தரிசித்தது கிடையாது என மகனிடம், தாய் சுடாராத்னா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என தாம் மனதில் உறுதி பூண்ட கிருஷ்ணகுமார் ஸ்கூட்டரிலேயே தாயை பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில் திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில் என அனைத்து கோயில்களுக்கும் இவர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வரும் கிருஷ்ணகுமார் தனது தாயார் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர் எனவும் முழு நாளும் வீட்டை சுத்தம் செய்வது சமைப்பது என அவர் சேவைகளை செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் சுற்றுலா
ஒரு தடவை தான் தாயை பெங்களூருக்கு அழைத்து சென்ற போது பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது திருவண்ணாமலை, திருவரங்கம், திருப்பதி போன்ற கோவில்களுக்கு சென்று உள்ளீர்களா? என தாயிடம் தான் கேட்டதாகவும் அதற்கு பதில் அளித்த தாய் அருகாமையில் உள்ள பெரிய கோயில்களுக்கு கூட நான் சென்றதில்லை என வருத்தமாக பதில் அளித்தார் எனவும் கூறுகின்றார்.
அந்த பதில் தமக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அதனை தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்து வந்த கிருஷ்ணகுமார், 2018 ஜனவரி மாதம் 14ஆம் தேதி பணியில் இருந்து விலகிக் கொண்டு தாயை அழைத்துக் கொண்டு பல்வேறு கோயில்களுக்கு சென்று வருகிறார் மாத்ரு சேவா சங்கல்ப யாத்ரா என இந்த யாத்திரைக்கு பெயர் இடப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்த பெற்றோருடன் பிள்ளைகள் நேரத்தை கழிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் சேமித்து வைத்த பணத்தை கொண்டு தற்பொழுது செலவுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவிக்கின்றார். யாரிடமும் பணம் பெற்றுக் கொண்டு இந்த பயணத்தை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையின் அரைவாசி பகுதியை நான்கு சுவற்றுக்குள்ளேயே கழித்து விட்டதாகவும் தற்பொழுது இந்த தேசத்தின் அதிசயங்களை பார்ப்பதற்கும் பார்த்து ரசிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், தனது கனவு நிறைவேறி உள்ளதாகவும் கிருஷ்ணகுமாரின் தாய் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான ஒரு மகனை பெற்றெடுத்தமைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.