நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகள் மீது ஆசீட் ஊற்றிய மாமியார்... - அதிர்ச்சி சம்பவம்..!
விருத்தாச்சலம் அருகே மருமகள் நடத்தையில் சந்தேகப்பட்டு பாத்ரூம் ஆசிட்டை ஊற்றி மாமியார் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகள் மீது ஆசீட் ஊற்றிய மாமியார்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன். இவருடைய மனைவி ஆண்டாள் (55). இவர்களுக்கு முகேஷ் ராஜு என்ற மகன் உள்ளார்.
தன் மகனுக்கு அண்ணன் மகளான கிருத்திகா என்ற பெண்ணை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ரிஷிதா, ரிஷிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கிருத்திகாவின் கணவர் முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து, விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த, கிருத்திகா மீது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, மாமியார் ஆண்டாள், பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து கிருத்திகாவின் மீது ஊற்றினார்.
இதில், கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல் மற்றும் பிற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கொசு மருந்தை எடுத்து வந்து கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். வீட்டை திறந்து பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவத்தில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக கிருத்திகா பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, ஆண்டாள் மற்றும் அவரது கணவர் கலிவரதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, மருமகள் மீது ஆசிட் வீசி கொலை செய்ய முயற்சி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.