கமகமக்கும் அவல் மோர்க்கூழ்... இப்படி செய்து ருசியுங்கள்
எமது பாரம் பரிய உணவுகளில் பண்டைய காலத்தில் இருந்தே கூல்லுக்கு தனியிடம் உண்டு.
உடல் எடையை குறைக்க நினைத்து உடற்பயிற்சி, டயட் என ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவல் மோர்க்கூழ் நல்ல மிகச் சிறந்த தேர்வாகும்.
அவல் உணவுகளில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்தளவு கொழுப்பு, புரதம் ஆகியவை உள்ளன. இந்தகைய சத்து மிக்க அவல் கூல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை
- அவல் - தேவையான அளவு (குறைந்தபட்சம் ஒரு கப்)
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- கால் கப்
- கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கடுகு - அரை தேக்கரண்டி
- உடைத்த உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - கொஞ்சம்
- புளித்த தயிர் - ஒரு கப்
- தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு
செய்முறை
வெறும் வாணலியில் முதலில் அவலை வறுக்க வேண்டும். அதனை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் தயிரில் நீர் சேர்த்து உப்பை கலந்து நன்கு கடைய வேண்டும்.
நல்ல வாசனை வரும். இதை நன்றாக கடைந்தால் இரண்டரை கப் வரை இருக்கும்.
பின்னர் வாணலியை எண்ணெய் விட்டு சூடேற்ற வேண்டும். தாளிக்க கடுகு, சீரகம், உளுந்து ஆகியவற்றை எண்ணெய்யில் போட வேண்டும்.

தொடர்ந்து கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் அனைத்தையும் வாணலில் போட்டு வதக்க வேண்டும்
இவை கருகாமல் அடுப்பைக் குறைத்து வைத்து கொள்ளுங்கள். இதனுடன் மோரை ஊற்றி கலக்க வேண்டும். அடுத்ததாக அரைத்த அவல் மாவை சேர்த்து கிளறிவிடவேண்டும். தேவையான அளவு உப்பிட்டு தேங்காய்த்துருவல் போடுங்கள். இவற்றை வேகவிட்டு பின்னர் கொத்தமல்லித்தழை தூவினால், கமகமக்கும் அவல் மோர்க்கூழ் தயார்!