முளைக்கட்டிய பயறில் தினமும் சூப் செய்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன.
இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
மேலும் உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவும்.
வைட்டமின் ‘இ’ சத்து இவற்றில் அதிகமிருப்பதால் கருப்பை, சினைப்பையை சீராக இயங்கச்செய்யும். தினமும் இதில் சூப் செய்து பருகினால் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
முளைக்கட்டிய பயறு வகைகளை சேர்த்து சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முளைக்கட்டிய பயறு வகைகள் (ஏதாவது 5 சேர்ந்தது) - அரை கப்
- வெங்காயம் - 1
- பூண்டு - 3 பல்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
- தேங்காய்ப் பால் - கால் கப்
- புளிக்காத கெட்டி தயிர் - கால் கப்
- தனியா - அரை டீஸ்பூன்
- மிளகு - சிறிதளவு
- கொத்தமல்லிதழை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முளைக்கட்டிய பயறை வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் வேகவைத்த பயறுடன், பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிக்சியில் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அதனுடன் மீதமுள்ள பயறு, உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பின்னர் கெட்டி தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
சுடசுட முட்டை கிரேவியை இப்படி செய்யுங்க... வழமையை விட ஒரு கைப்பிடி அதிகம் சாப்பிடுவீங்க!