முளைக்கட்டிய பயறில் சூப்.... யாரெல்லாம் குடிக்கலாம்!
முளைக்கட்டிய பயறு வகைகளை சேர்த்து சூப் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவாக எடுக்கலாம்.
மிகவும் சக்தி வாய்ந்த உணவாக இருக்கும்.
முளைவிட்ட தானியங்கள், ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், இன்னும் பலர் அதை தினசரி உணவாக பயன்படுத்த தயங்குகின்றனர்.
உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக, உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் இளைஞர்கள் பலர், முளைகட்டிய பயிறுகளை தான், முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனிதன் உட்கொள்ளும் எண்ணற்ற உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது.
ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளை விடும் போது பன்மடங்காகிறது.
முளைவிட்ட கோதுமையில், வைட்டமின் "சி', 600 சதவீதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் "சி' அளவை விட, இது அதிகம்.
இப்பயிறு வகைகளை சாப்பிடுவது மூலம், உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
இன்று முளைக்கட்டிய பயறில் சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
- முளைக்கட்டிய பயறு வகைகள் (ஏதாவது 5 சேர்ந்தது)
- அரை கப் வெங்காயம் - 1
- பூண்டு - 3 பல்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
- தேங்காய்ப் பால் - கால் கப்
- புளிக்காத கெட்டி தயிர் - கால் கப்
- தனியா - அரை டீஸ்பூன்
- மிளகு - சிறிதளவு
- கொத்தமல்லிதழை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முளைக்கட்டிய பயறை வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் வேகவைத்த பயறுடன், பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிக்சியில் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் மீதமுள்ள பயறு, உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பின்னர் கெட்டி தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.