ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமா? கடவுச்சொல் அமைக்கும் போது இதை கட்டாயம் செய்திடுங்க
இன்று நம்மில் பெரும்பாலான நபர்கள் மின்னஞ்சல் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் கடவுச்சொல் பதிவிட்டே நமது மின்னஞ்சலுக்குள் செல்ல முடியும்.
சமூக ஊடக தளங்கள் அல்லது பிற செயலிகளின் கணக்குகளாக இருந்தாலும், பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொற்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேக்கிங்கிற்கு எளிதில் பலியாகக்கூடிய அத்தகைய சில கடவுச்சொற்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
கூடுதலாக, ஹேக்கிங்கைத் தவிர்ப்பது மற்றும் உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இணையத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகவு கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹேக்கிங் மோசடிகளுக்கு பலியாக நேரிடும்.
நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று, பயனர்களின் கடவுச்சொற்களாகும். நீங்கள் தவிர்க்க வேண்டிய கடவுச்சொற்கள், ஹேக்கர்களுக்கு மிகவும் எளிதான இலக்காக இருக்கும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சில காலத்திற்கு முன்பு, இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் பயனர்கள் பயன்படுத்தக்கூடாத கடவுச்சொற்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
'123456', '123456789', 'Qwerty', 'Password' மற்றும் '1111111' ஆகியவை கணக்குகளை ஹேக்கிங் செய்ய வழிவகுக்கும் பொதுவான கடவுச்சொற்கள் என கூறப்பட்டுள்ளது.
கடவுச்சொல்லை அமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை
நீங்கள் அமைக்கும் கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்ட், குறைந்தது 8-12 எழுத்துக்கள் நீளமாக இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கவும். இவற்றில் எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துகள் அனைத்தும் இருக்க வேண்டும்.
உங்கள் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றுவதும் பாதுகாப்பாக இருக்க ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கடவுச்சொல்லுடன், இரண்டு காரணி அங்கீகார அம்சத்தையும் பயன்படுத்தவும், இதனால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.