முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர் - மெக்சிகோவில் நடந்த வினோத சடங்கு!
முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர் ஒருவரின் விநோத நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இதன் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் தனது நகரம் இயற்கையுடன் செழிப்பாக இருக்க வேண்டும் என பழங்கால சடங்குப்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மேலும், மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்த திருமணத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது. கிறிஸ்துவ முறைபடி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் திருமணம் முடிந்ததும் முதலையை மேயர் மகிழ்ச்சியுடன் முத்தமிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை" எனக்கூறியுள்ளார்
