ஆண்களே பாதங்களை பார்த்துக் கொள்ளுங்கள்!
அழகை மெருகேற்றுவதில் பெண்கள்தான் அதிகமாக சிரமப்படுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், தற்சமயம் ஆண்களும் தங்களது அழகு சார்ந்த விடயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
முகத்துக்கு ஆண்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் க்ரீம்கள் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள்.
தாடியை தமக்கு விருப்பமான ஸ்டைல்களில் மாற்றிக் கொள்கிறார்கள்.
அதேபோல் உடல் கட்டமைப்பை கட்டுக்குள் வைக்க ஜிம்முக்குச் செல்லுதல், உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் போன்றவற்றை பின்பற்றுகிறார்கள்.
ஆனால் தங்களது பாதங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
ஆண்கள் தங்கள் பாதங்களை பராமரித்துக்கொள்ள எளிய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
உபயோகிக்கும் சொக்ஸில் கவனம்
ஆண்கள் அதிக நேரம் சொக்ஸ் அணிந்திருப்பதால் பாதங்களுக்கு காற்றுப்படுவது மிகவும் குறைவாக இருக்கும். எனவே முடியுமானவரை சொக்ஸ் பாவிப்பதை குறைக்கலாம். அன்றாடம் சொக்ஸை மாற்றுவதும் பாதங்களுக்கு நன்மையளிக்கும்.
நகங்களை வெட்டுங்கள்
கை நகங்களை வெட்டுவதைப் போல், கால் நகங்களை சவர்க்காரத் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, நகங்களை சிறிது நீளமாகவிட்டு குறுக்கு நேராக வெட்ட வேண்டும்.
சவர்க்காரமிட்டு கழுவுங்கள்
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் பாதங்களை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். ஏனெனில் கால்களில் அழுக்கு சேர்ந்தால் கொப்புளங்கள், சொறி போன்றவற்றை உருவாக்கிவிடும். அதனால் சுத்தமாக கழுவி விடுவது நல்லது.
பாதங்களுக்கு லோஷன் இடுங்கள்
பாதங்களுக்கு லோஷன் தேய்ப்பதால் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
பாத வெடிப்பை தவிர்த்திடுங்கள்
ஆண்களின் பாத வெடிப்புக்கு பெரும்பாலும் பித்தமே காரணம்.
வெடிப்புக்களை அலட்சியம் செய்யாது கால்களுக்கு தொடர்ந்து ஸ்க்ரப் செய்வது போன்று பாதங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும்.
இதனால் பாதங்களின் அழகு அதிகமாகும்.