மன உளைச்சலால் அப்படி பேசிவிட்டேன்.. நீதிபதியிடம் கதறும் நடிகை மீரா மிதுன்!
பிக்பாஸ் மாடல் அழகியான மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் அவதூறாக, தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபமாய் வெடிக்கவே அவரை கைது செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனால், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியும் மீரா ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்துள்ளார்.
அதன் பின்னர் தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவருக்கு துணையாக இருந்த அவரது ஆண் நண்பரும் கைது செய்யபட்டார்.
இந்த நிலையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அப்போது, அவர்கள் தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார் தாரர் தரப்பில் முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.