350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இப்படி ஒரு நிலை: மன்சூர் அலிகான் ஆதங்கம்!
mansoor ali khan: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், தான் நடித்த பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அவர் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் வருத்தம்
சென்னை வடபழனியில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்ற ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், இதுகுறித்து தனது வேதனையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், ‘கருப்பு’ படத்துக்காக தான் கடினமாக உழைத்து நடித்த காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும், குறிப்பாக ‘நாங்க நாலு பேரு’ பாடலுக்காக மிகவும் சிரமப்பட்டு நடனமாடியதாகவும் தெரிவித்தார்.
நேரமின்மை காரணமாக அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும், பின்னர் அவற்றை யூடியூபில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், இதுவரை அந்தக் காட்சிகள் வெளியாகவில்லை என்றும், அதுகுறித்து கேட்டபோது பொறுப்பற்ற பதில் கிடைத்ததாகவும் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டினார்.
“350-க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகால அனுபவம் கொண்ட என்னை ஒரு காட்சியில் வெறுமனே நிற்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், இன்றைய திரைப்படங்களில் சில ஹீரோக்கள் வெறும் ‘பில்டப்’ காட்சிகளின் மூலமே தங்களது பயணத்தைத் தொடர்வதாக விமர்சித்த மன்சூர் அலிகான், “நான் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை; எனது உழைப்பால் உயர்ந்தவன்” என்றும் காட்டமாகத் தெரிவித்த காணொளி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |