நாவூரும் சுவையில் மாங்காய் சாதம்... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டால் மலிவு விலையில் சந்தையில் மாங்காய் மாம்பழங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
மா பழமாக இருக்கும் போது சாப்பிடுவதை விட காயாக இருக்கும் போது சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவி புரியும். அதிலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவற்றை சந்திக்கக்கூடும் எனவே இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.
இந்த கோடை வெயிலுகப்கு இதமாக நாவூரும் சுவையில் மாங்காய் சாதத்தை எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
அரிசி -2 கப்
பச்சை மாங்காய் (புளிப்பு, நடுத்தர அளவு) - 1
கறிவேப்பிலை -1 கொத்து
பச்சை மிளகாய் -4 நறுக்கியது
வர மிளகாய் -2
மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி
வேர்க்கடலை - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
நறுக்கிய இஞ்சி -1 துண்டு
எண்ணெய் - 3 தே.கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் மாங்காய் சாதத்துக்கு தேவையான அரிசியை நன்றான கழுவி வேகவைத்து உதிரியான பதத்தில் சாதம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மாங்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடானதும், வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து நன்றாக தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை பொன்நிறமாக மாறும் போது பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மொறு மொறுப்பாக வதக்கிய பின்னர் துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் வேர்க்கடலையை சேர்த்து இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்தன் பின்பு துருவி வைத்துள்ள மாங்காய், உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
மாங்காய் மென்மையாக கூழ் போல மாறும் வரையில் வதக்கிய பின்னர், இந்த கலவையை சமைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலந்துக்கொண்டால், இவ்வளவு தான் அசத்தல் சுவையில் மாங்காய் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
