மாம்பழ சீசன் ஆரம்பிச்சிருச்சி...மாம்பழ மோர்க்குழம்பு கண்டிப்பாக செய்து பாருங்க...
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகின்றது.
இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
தற்போது மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டதால் மாம்பழங்கள் மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
எனவே மாம்பழத்தை கொண்டு வெயிலுக்கு இதமாக சுவையான மாம்பழ மோர்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இனிப்பான மாம்பழங்கள் – 2
புளித்த மோர் – 2 கப்
அரிசி – 1 தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த பேஸ்டை மோரில் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழத்தில் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மோர் குழம்பு நன்றாக கொதித்த பின்னர் இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை குழம்பில் ஊற்றினால் மணமணக்கும் மாம்பழ மோர் குழம்பு தயார்.
வெயில் காலத்தில் வாரம் ஒரு முறை இந்த மாம்பழ மோர் குழம்பு செய்து சாப்பிடுவது உடல் வெப்பம் காரணமாக ஏற்பட கூடிய ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |