மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவம்! வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழ்நாட்டை நெருங்கிவரும் நிலையில், இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது.
மாண்டஸ் புயல்
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகியுள்ள நிலையில், இதற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
நேற்று மெதுவாக நகர்ந்த இந்த புயலின் வேகம் இன்று சற்று வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் தீவிர புயலாக இருக்கும் இந்த மாண்டஸ் புயல் இன்று காலை எப்படியும் வலிமை இழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி இந்த அதிதீவிர புயல் வெறும் புயலாக மாறி இன்னும் 6 மணி நேரத்தில் வலிமை இழக்கும் என்று கூறியுள்ளது.
ஆனால் வெதர் மாடல்களின் கணிப்பின்படி புயல் கண்டிப்பாக தீவிர புயலாகவே கரையை கடக்கும். வடக்கு தமிழ்நாட்டில் கரையை கடக்கும். வலிமையான புயலாக 100 km/h காற்று வேகத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.