வீட்டிலிருந்து காணாமல் போன 500 பவுன் நகை! தோழியால் திருடனாக மாறிய கணவர்
மனைவியின் நகையை திருடிய கணவர் ஒருவர் தன்னிடம் பேசிவந்த 22 வயது இளம்பெண்ணிற்கு கார் வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன நகை
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர்40. இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததுடன், தனது தம்பியுடன் சேர்ந்து ஸ்வீட் கடையும், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது தான் வைத்திருந்த 300 பவுன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கணவரின் தம்பி மற்றும் மாமியாரிடம் கேட்ட போது தனக்கு தெரியவில்லை என்று கூறியதோடு, மாமியார் தனது பீரோவையும் சென்று பார்த்துள்ளார். அதில் அவர் வைத்திருந்த 200 பவன் நகை, மற்றும் 5 தங்க கட்டியையும் காணாமல் போயுள்ளது.
அம்பலமான கணவரின் சுயரூபம்
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் சேகரின் பதில் மட்டும் பொலிசாருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர், தான் தான் வீட்டிலிருந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டதுடன், இதனை விற்று தனது தோழிக்கு கார் வாங்கி பரிசளித்ததாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து விசாரித்தபோது, தனக்கும் வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த ஸ்வாதி(22) இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், நாங்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், தற்போது நகையை விற்று கார் வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணுக்காக சொந்த வீட்டிலேயே நகையை திருடிய சேகரையும், அந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, குறித்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.