ஆற்றுக்குள் மயங்கிய நிலையில் கணவர்... காப்பாற்ற சென்ற மனைவி பலியான சோகம்
இந்தியாவில் குளிக்கச் சென்ற கணவரும், கணவரை தேடி சென்ற மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ராசு என்பவர் அவரது மனைவி மல்லிகாவுடன் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே தங்கி இருந்து தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ஒரு தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக ராசு, அவருடைய மனைவி மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ராசு அங்கு வேலை முடிந்ததும் அருகே இருந்த ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கணவரை காணாததால் மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் இருவரும் சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது ராசு ஆற்றுக்குள் மயங்கிய நிலையில் அவதானித்த மல்லிகா அவரைக் காப்பாற்ற முயன்ற போது, அவரும் சில நிமிடங்களில் மயங்கியுள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிசார் வந்து பார்த்த போது, ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து கிடந்ததும், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி ராசு, மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.