Amla Chutney: வைட்டமின் 'C' யின் குறைபாடு உள்ளதா? இந்த சட்னி போதும்
காலை உணவிற்கு பல வகை வகையான சட்னி செய்து சாப்பிட்டு இருப்போம்.
சூடான இட்லி தோசைக்கு ஒரு காரசாரமான சட்னி வைத்தால் அதுவே போதும். ஆனால் இந்த சட்னி ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
இதற்காக தான் நெல்லிக்காய் சட்னி செய்முறையை இந்த பதிவில் காட்டப்போகிறோம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை வைத்து சட்னி செய்யும் போத நமக்கு உணவு உண்ணுவதுடன் ஆரோக்கியமான பல சத்துக்களும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- எள் - 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 2 பல்
- சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நெல்லிக்காய் - 4
- தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பச்சை மிளகாய் - 5
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி உள்ளே இருக்கும் விதையை எடுத்துவிட்டு சிறுதுண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடான பின்னர் அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பருப்பு நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் வெள்ளை எள் சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு பல் மற்றும் சிறிதளவு இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் சீரகத்தையும் சேர்க்க வேண்டும். இதன் பின்னர் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நெல்லிக்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து விட வேண்டும்
பின்னர் அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மேலும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் வதங்கிய பின்னர் சட்னிக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும். பின்னர் புளியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
வதக்கிய பொருட்களை நன்றாக ஆற விட்டு பின்னர் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நெல்லிக்காய் சட்னியை அரைக்க வேண்டும். இதை கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு மிளகாய் வத்தலை சேர்க்க வேண்டும்.
கால் ஸ்பூன் பெருங்காய தூளையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து தாளித்து அதை சட்னியில் நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
