இளம் தயாரிப்பாளர், பழம்பெரும் நடிகர் அடுத்தடுத்து மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்
தெலுங்கு சினிமாவின் பிரபல செய்தி தொடர்பாளர் மற்றும் இளம் தயாரிப்பாளரான மகேஷ் கோனேரு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி தெலுங்கு திரையுலகத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகேஷ் கோனேரு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தனிப்பட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். மகேஷ் கோனேரு ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் சினிமா பிரபலங்களின் செய்தி தொடர்பாளராக மாறினார். 2019ம் ஆண்டு மகேஷ் நந்தமூரி கல்யாணராமின் ‘118.’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் ‘திம்மருசு’ என்ற படத்தையும் தயாரித்தார். தற்போது ‘சபகு நமஸ்காரம்’ மற்றும் ‘போலீஸ் வரி ஹெச்சாரிகா’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வந்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது மூப்பு காரணமாகவும், உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 82 .
ஸ்ரீகாந்த் மூத்த பழம்பெரும் நடிகர்களில் ஒருவர், 1965 ஆம் ஆண்டு ' வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமாகி, சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கியுள்ளார்.
இவர் முதல் படம் 'வெண்ணிற ஆடை' என்பதால் திரையுலகளில் பலராலும் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் என்றும் அழைக்கப்பட்டார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 90 களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெரும் அதிரடி வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
வெள்ளித்திரையை தாண்டி குடும்பம், மங்கை போன்ற சீரியல்களிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரையுலகில் தன்னுடைய வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாக, அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்தார்.
ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நாடகங்களில் சேர்ந்து சிறிய சிறிய வேடங்களில் நடிக்க துவங்கினார். இவரது துடிப்பான நடிப்பு, அழகு இவரை வெகு விரைவாகவே திரையுலகில் கொண்டு போய் சேர்த்தது. வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.
தமிழ் படங்களில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகனாக நடித்த முதல் ஆண் நடிகர் இவர்தான் என்பதும் குறிபிடித்தக்கது.