தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி
மகாராஷ்டிராவின் ஜுன்னாரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 13,000 தக்காளி பெட்டிகளை விற்று ஒரு மாதத்தில் ரூ 1.5 கோடி சம்பாதித்துள்ளார்.
கடும் விலையில் தக்காளி விற்பனை:
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது. அதே போல், உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். அத்தகைய தக்காளியை பதுக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
கோடீஸ்வரரான விவசாயி:
அந்தவகையில், மகாராஷ்டிராவின் ஜுன்னாரில் தற்போது தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துக்காராம் பாகோஜி கயாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்தில் 13,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ1.5 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.
துக்காராமுக்கு சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனது 12 ஏக்கர் நிலத்தில் மகன் ஈஸ்வர் காயகர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோரின் உதவியுடன் தக்காளி பயிரிட்டுள்ளார். அவர்கள் நல்ல தரமான தக்காளியை பயிரிடுவதாகவும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றிய அவர்களின் அறிவு, பூச்சியிலிருந்து தங்கள் பயிர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
துக்காராமின் மருமகள் சோனாலி நடவு, அறுவடை, பேக்கேஜிங் போன்ற பணிகளை நிர்வகிக்கும் அதே வேளையில், அவரது மகன் ஈஸ்வர் விற்பனை, மேலாண்மை மற்றும் நிதி திட்டமிடல் ஆகியவற்றை பார்த்து கொள்கிறார். அதனால் அவர்களுக்கு கடந்த மூன்று மாத கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கயாகர் , நாராயண்கஞ்சில் ஒரு தக்காளி பெட்டியை விற்று ஒரு நாளில் 2,100 ரூபாய் சம்பாதித்துள்ளார். மொத்தம் 900 பெட்டிகளை விற்று ஒரே நாளில் ரூ.18 லட்சம் சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், தக்காளி பெட்டிகளின் தரத்தின் அடிப்படையில் 1,000 ரூபாய் முதல் 2,400 ரூபாய் வரை விற்க முடிந்தது.
நாராயண்கஞ்சில் அமைந்துள்ள ஜுன்னு வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் சந்தையில், தரமான (20 கிலோகிராம்) தக்காளிப் பெட்டியின் அதிகபட்ச விலை ரூ.2,500 ஆகவும், அதாவது கிலோவுக்கு ரூ.125 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்த குழு தக்காளி விற்பனை மூலம் ஒரு மாதத்தில் ரூ.80 கோடி வர்த்தகம் செய்துள்ளதுடன், அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.
தக்காளி விற்பதன் மூலம் விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறுவது மகாராஷ்டிராவில் மட்டும் இல்லை. கர்நாடகாவின் கோலாரைச் சேர்ந்த விவசாயிகள் குடும்பம் ஒன்று இந்த வாரம் 2,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.38 லட்சம் சம்பாதித்துள்ளனர்.