மதுரை பாணியில் காரசாரமான மட்டன் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க!
மதுரை என்றாலே திரைபிரபலங்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரையில் அனைவருக்கும் சட்டென்று நினைவில் வருவது அசைவ உணவு தான்.
காரணம் மட்டன், சிக்கன், மீன், இறால் என அனைத்துமே மதுரை மக்களின் பாணியில் சமைக்கும் போது, இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது... என்று மனதுக்கும் பாடல் பாடும் அளவுக்கும் மணமும் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பாக மதுரை உணவுகளில் காரம் சற்று தூக்கலாகத்தான் இருக்கும். அந்தவகையில், மதுரையின் பேமஸ்களில் ஒன்றான மட்டன் தொக்கு எவ்வாறு செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
மட்டன் - 500 கிராம்
மல்லித்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
சீரகத் தூள் - 1மேசைக்கரண்டி
சோம்பு பொடி - 1 மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தே.கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க தேவையானவை
பட்டை - 1
கிராம்பு 4
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மட்டனை நன்றாக கழுவி தண்ணீரை முழுமையாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மட்டனுடன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து குறைந்து முப்பது நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதற்கிடையில் பெரிய வெங்காயத்தை வெங்காயத்தை பொடியாக நறுக்கியும், பச்சை மிளகாயை இரண்டாக கீறியும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பட்டை பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
குறிப்பாக சோம்பு பொடியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது தான் மதுரை சமையலில் மட்டன் தொக்கின் சுவையை இரட்டிப்பாக்கும்.
மசாலக்கள் நன்றாக வதங்கி பச்சை வாசனை போனதும் அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 - 10 நிமிடங்களுக்கு தண்ணிர் சேர்க்காமல் நன்றாக வேகவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் காரசாரமான மட்டன் தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |