மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் பாணியில் ஜவ்வரிசி வடை: எப்படி செய்வது?
பொதுவாகவே மாலை நேரம் தேனீர் குடிப்பதற்கு கடித்துக்கொள்ள ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது இயல்பு தான்.
அப்படி தேனீருடன் சூப்பர் மேச்சிங் கொடுக்கும் ஜவ்வரிசி வடையை சமையல் கில்லாடி மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பிரட் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு சுடுநீர் ஊற்றி சுமார் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரத்தின் பின்னர் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை வடித்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தண்ணீரில் பிரட் துண்டுகளை நனைத்து எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, ஜவ்வரிசியுடன் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வடை ரெடி. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |