உல்லாச கப்பலில் முதன் முறையாக பயணம் செய்பவரா நீங்கள்? எக்காரணத்தை கொண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்
உல்லாச கப்பலில் பயணம் செய்யும் நபர்கள் எக்காரணத்தை கொண்டும் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாதாம். அதாவது, உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிற்கும்போது, தாமதமாக வருவதுதான்.
பொதுவாக Sea Day மற்றும் Port Day என உல்லாச கப்பலில் நாட்களை 2ஆக பிரித்திருப்பார்கள். இதில், சீ டே-வின்போது, உல்லாச கப்பல் கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும்.
மறுபக்கம் போர்ட் டேவின் உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிற்கும். அன்றைய தினத்தில் உல்லாச கப்பல் எந்த துறை முகத்தில் நிற்கிறதோ அந்த நகரத்தை சுற்றி பார்க்கலாம்.
ஆனால், நகரத்தை சுற்றி பார்ப்பதற்கு செல்லும் ஒரு சில பயணிகள் குறித்த நேரத்தில் உல்லாச கப்பலுக்கு மீண்டும் திரும்பி வருவதில்லை. உல்லாச கப்பலில் அடிக்கடி பயணம் செய்திருந்தால், கடைசி நேரத்தில் மிகவும் அவசரமாக ஓடி வரும் பயணிகளை பார்த்திருக்கலாம்.

இதனால் நீங்கள் உல்லாச கப்பலில் முதல் முறையாக பயணிப்பவர் என்றாலும் சரி அல்லது அடிக்கடி செல்பவர் என்றாலும் சரி, துறைமுகத்திற்கு தாமதமாக வரும் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். பயணிகளுக்காக காத்திருக்காமல் உல்லாச கப்பல் கிளம்பி செல்வதற்கு, பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவை துறைமுகத்தின் விதிமுறைகள், பயண திட்டங்கள் மற்றும் இதர காரணிகளை கருத்தில் கொண்டு, உல்லாச கப்பலின் கேப்டன் தான் இந்த முடிவை எடுப்பார். உதாரணமாக துறைமுகத்தில் நிறுத்துவதற்காக சம்பந்தப்பட்ட உல்லாச கப்பல் நிறுவனம் கட்டணம் செலுத்தியிருக்கும்.
மீண்டும் கிளம்புவதற்கு தாமதமானால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தை செலுத்த உல்லாச கப்பல் நிறுவனங்கள் மட்டுமல்லாது, யாருமே விரும்ப மாட்டார்கள்.

அத்தோடு, ஒரு துறைமுகத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டால், அடுத்த துறைமுகத்திற்கு மிகவும் வேகமாக செல்ல வேண்டியிருக்கும். இது தேவையில்லாமல் எரிபொருள் செலவை அதிகரிக்கும். உல்லாச கப்பல்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள்.
எனவே ஒருவர் செய்யும் தாமதத்திற்காக உல்லாச கப்பல் காத்து கொண்டிருக்காது. முக்கியமாக உல்லாச கப்பல் புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்தில் நீங்கள் இல்லை என்றால், மைக் மூலம் உங்களின் பெயர் அறிவிக்கப்படும்.
சிறிது நேரத்திற்கு பிறகும் பதில் இல்லை என்றால், மீண்டும் ஒரு முறை உங்கள் பெயரை உல்லாச கப்பல் அதிகாரிகள் அறிவிப்பார்கள். இதற்கும் பதில் இல்லை என்றால், உல்லாச கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் உங்கள் அறைக்கு செல்வார்கள்.

அங்கு நீங்கள் இருக்கிறீர்களா? என பரிசோதனை செய்யப்படும். அங்கும் நீங்கள் இல்லை என்றால், உங்களின் பாஸ்போர்ட் தேடப்படும். உங்களின் பாஸ்போர்ட்டை தேடி எடுப்பதற்கு உல்லாச கப்பலின் 'மாஸ்டர் கீ' பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படும்.
ஒருவேளை உங்கள் பாஸ்போர்ட்டை கண்டறிய முடியாவிட்டால், பாஸ்போர்ட் உங்கள் கையில் இருப்பதாக உல்லாச கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் கருதி கொள்வார்கள்.

மேலும், மாறாக பாஸ்போர்ட் கண்டறியப்பட்டால், கப்பல் ஏஜென்ட்டிடம் அதனை வழங்கி விடுவார்கள். தாமதமாக வந்து உல்லாச கப்பலை தவற விடுபவர்களுக்கு உதவி செய்வதற்காக, துறைமுகங்களில் கப்பல் ஏஜெண்ட்கள் இருப்பார்கள்.
அவர்களிடம்தான் உங்கள் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும்.
எனவே உல்லாச கப்பல் பயணத்தை பொறுத்தவரையில், தெரியாமல் செய்யும் ஒரு வினாடி தாமதம் கூட, மிக கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும்.