வெறும் 330 கிராமில் பிறந்த குழந்தை... கைவிரித்த மருத்துவர்கள்! தற்போது பிறந்தநாள் கொண்டாடிய அதிசயம்
6 மாத குறை பிரசவத்தில், மருத்துவரால் காப்பாற்ற முடியாது என்று கைவிடப்பட்ட 330 கிராம் குழந்தை இன்று உயிர் பிழைத்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிறந்த குழந்தை தான் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன்.
ரிச்சர்ட்டின் தாயாருக்கு சில மருத்துவ சிக்கல் ஏற்பட்ட நிலையில் பிரசவத்துக்கு 131 நாள்களுக்கு முன்பே ரிச்சர்ட் பிறந்தான். இதனால் குழந்தை எப்படி வளரப் போகிறானோ என்ற கவலை அவர்களது பெற்றோருக்கு அதிகமாக இருந்தது.
அப்போது, ரிச்சர்ட்டின் எடை சுமார் 330 கிராம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் ரிச்சர்ட்டின் பெற்றோரை அழைத்த மருத்துவர், உங்கள் மகன் பிழைக்க வாய்ப்பே இல்லை என்பதைக் கூறியுள்ளார்.

மகனை ஆசை ஆசையாக வளர்க்க வேண்டும் என கோட்டை கட்டிய பெற்றோரின் கனவு இடிந்து போனாலும், மகனைக் காப்பாற்ற 6 மாதங்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
6 மாத சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய ரிச்சர்ட் கடந்த 5ம் திகதி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளான்.
அப்போது பிறந்த நாள் கேக்கை ரிச்சர்ட் ரசித்துச் சாப்பிட்ட காட்சிகள் பலரையும் நெகிழவைத்தது.
அதோடு அமெரிக்காவில் குறைப்பிரசவத்தில் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தை எனும் கின்னஸ் சாதனையை ரிச்சர்ட் படைத்துள்ளான்.
