காவல்நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி: நொடிப்பொழுதில் அரங்கேறிய துயரம்
காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி, காவலர்கள் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் கோடிஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜ் (25). தனியார் வங்கியில் பணிபுரியும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான ரம்யா(21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மதியம் ராமையன்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ரம்யாவும், ஆனந்தராஜும் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டார் இருவரையும் தேடிவந்த நிலையில், ஆனந்தராஜ் -ரம்யா தம்பதியர் காதல் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரி பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பேட்டை காவல் ஆய்வாளர் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் ராம்குமார் காவல் நிலையத்திற்கு வந்த வேகத்தில் கையில் இருந்த கத்தியை கொண்டு ரம்யா மற்றும் ஆனந்தராஜை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காதலர்களை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய ராம்குமார் மற்றும் அவருடன் வந்த மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.