8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம்: தற்போது நடந்த துயரம்
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் மாங்குளத்தில் அரங்கேறியிருக்கிறது.
தொண்டமாநத்தம் மாங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன்(40). இவர் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பிரபாவதியை எட்டு வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக தொண்டமாநத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். கண்ணன் – பிரபாவதி தம்பதிக்கு 7 வயதிலும் 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
கண்ணன் வசித்து வந்த தொண்டமாநத்தம் பகுதியில் சாரதி என்பவர் தனது நிலத்தினை கண்ணனுக்கு 6 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். நிலைத்தை விற்றுவிட்டு மீண்டும் அந்த நிலத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், வெல்டிங் காண்டிராக்டரான கண்ணன் நெல்லையில் ஒப்பந்த பணிகளை செய்துகொண்டிருந்தார். மூன்றுநாட்களுக்கு முன்னர் அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏரிக்கரையில் தாயம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து கத்தியால் கண்ணனின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் சாரதி.
வில்லியனூர் போலீசார் சாரதியை கைது செய்துள்ளனர்.