அதிக நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்கின்றீர்களா? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படுகின்றது. அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
அதிக நேரம் அமர்ந்து வேலை
இன்றைய டிஜிட்டல் காலத்தில் பெரும்பாலான நபர்கள் அதிகமாக அமர்ந்து கொண்டு தான் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு இருப்பதால் உழைப்பு இல்லை என்று நினைத்துவிடக்கூடாது.
அத்தருணத்தில் மூளையின் உழைப்பு அதிகமாக இருக்கின்றது. ஆனால் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது.
மனிதனின் ஆகச்சிறந்த சக்தியை வெளிப்படுத்துவது முதுகெலும்பு தான். அதன் செயல்பாடு குறைந்துவிட்டால், உடல் முழுவதிலும் தளர்வு ஏற்பட்டது போல பலர் உணர்ந்திருப்பர்.
ஒரே இடத்தில் பல மணிநேரம் அசைவில்லாமல் வேலை பார்த்தால் முதுகெலும்பு சார்ந்த பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் அரை மணிநேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையில் இருந்து எழுந்து இரண்டு முதல் ஐந்து நிமிடம் ஒரு சிறிய நடைபயிற்சி முடித்தபின், மீண்டும் பணியைத் தொடங்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இப்படி செய்தால் நாளடைவில் வரும் கழுத்து வலி, முதுகு தண்டு வலி, தோள்பட்டை வலி என பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
image: istockphoto
அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் என்ன பிரச்சினை?
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உட்பட 30க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுவதாக மூத்த மருத்துவர் ஆலோசனை அளித்துள்ளார். இதனால் தோள்பட்டை வலி, வேலை உற்பத்தித்திறனில் குறைவு போன்றவற்றை சந்திக்க நேரிடுமாம்.
குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது கழுத்து, கை, கால், தோள்பட்டையை நன்றாக அசைத்து சிறிய நடைபயிற்சி மேற்கொள்ளவும்.
சரியான இருக்கைகள் மற்றும் டேபிள்களை அமைத்து கொள்வது, உடலுக்கு தேவையான தண்ணீரை அவ்வப்போது பருகுவது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது என்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்க முடியும். வேலை சம்பந்தமான மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம் மற்றும் சுவாச பயிற்சியினை மேற்கொள்ளவும்.
மேலும் கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு கண் பராமரிப்பு முக்கியமாகும். அதிக நேரம் கணினியில் செலவிடும் நபர்களுக்கு கண் பராமரிப்பு என்பது அவசியமாகிறது. இதற்காக 20-20-20 விதியைப் பின்பற்றவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகளுக்கு 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் பார்க்கவும்.
வழக்கமான உடல்நலப் பரிசோதனை மேற்கொண்டு உடம்பை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |