வெறும் 10 நிமிடத்தில் தயாராகும் வேர்க்கடலை சட்னி
நமது வீடுகளில் இட்லி, தோசை போன்ற உணவுகள் சமைப்பது வழக்கம். இந்த உணவுகளை சட்னியுடன் உண்பதற்கு அருமையாக இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் விதவிதமான சட்னி சாப்பிட்டு இருப்பீர்கள். புதிதாக வேர்க்கடலை சட்னி செய்திருக்கீங்களா? அருமையான சுவையில் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் கொழுப்புச்சத்தும் அதிக அளவில் உள்ளன.
இந்த சட்னி உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த சட்னியை தாராளமாக உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை - ஒரு கப்
- எண்ணைய் - 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பூண்டு - 5 பல்
- சிவப்பு மிளகாய் - 8
- புளி -தேவையா அளவு
- உப்பு - தேவையா அளவு
தாளிப்பதற்கு
- எண்ணைய் - ஒரு தேக்கரண்டி
- கடுகு - தேவையா அளவு
- சீரகம் -தேவையா அளவு
- உளுத்தம்பருப்பு -அரை தேக்கரண்டி
- சிவத்த மிளகாய் -2
- பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை -தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்து எடுக்க நேரம் இல்லை என்றால் நீங்கள் வறுத்த வேர்க்கடலையை பயன்படுத்தலாம்.
அதன் பிறகு வறுத்த வேர்க்கடலையை சிறுது நேரம் ஆற விடுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு ,சிவப்பு மிளகாயை போட்டு வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் கொஞ்சம் புளி சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்னர் ஒரு கோப்பையில் மாற்றி ஆற விட வேண்டும்.
பின்னர் ஆறவிட்ட வேர்க்கடலையின் தோலை நீக்கி கடலையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை வதக்கிய வெங்காயம், மிளகாய், புளி, பூண்டு எல்லாத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணிர் ஊற்றாமல் அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் சட்னி பதம் வருவதற்கு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மிகவும் கெட்டியாகவும் இருக்க கூடாது, மிகவும் தண்ணியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் தாளிக்கும் கரண்டி ஒன்றில் எண்ணெய், உளுத்தம் பருப்பு, கடுகு ,சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை இட்டு நன்றாக தாளிக்க வேண்டும்.
இந்த கலவையை எடுத்து சட்னியில் ஊற்றி எடுத்தால் கமகமக்கும் வேர்க்கடலை சட்னி ரெடி.