நோயை எதிர்த்து போராடும் எலுமிச்சை மிளகு டீ
கொரோனா தொற்று அதிகமுள்ள காலகட்டங்களில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தாண்டி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் மட்டுமே, உள்ளே நுழையும் வைரஸ்களை எதிர்த்து போராட முடியும்.
எனவே தினந்தோறும் நம் உணவில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய, ஆக்சிஜன் அளவை சீராக பராமரிக்ககூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
மாலை, காலை நேரங்களில் டீ, காபிக்கு பதிலாக எலுமிச்சை, இஞ்சி, மிளகு, பட்டை கொண்டு செய்யப்படும் டீயை அருந்தலாம்.
இந்த பதிவில் எலுமிச்சை மிளகு டீ செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
தேன் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை
2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.
பயன்கள்
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது, நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை, நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினியாகவும் செயலாற்றும்.