புதன் தோஷம் நீக்கும் அதிசய இலை! விஞ்ஞானமே வியக்கும் ஜோதிட சூட்சுமம்
துளசிக்கும் புதனுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு சிலரால் சொல்லி விடமுடியும். இன்னும் ஒருபடி மேலே சென்று ஜோதிட சூட்சுமத்தில் புதனின் ஆதிக்கம் கொண்ட துளசியின் மகிமை என்னவென்று பார்ப்போம். ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமான துளசி என்ற புனித மகள், அரச தர்மத்துவஜனுக்கும் மாதவிக்கும் கார்த்திகை மாதம், பௌர்ணமியில் வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவள்.
இவள் ஸ்ரீமந்நாராயண பெருமாளை கணவனாக மணக்க விரும்பியவள் அதேபோல் இன்றும் நாராயணன் கழுத்தில் தவழ்பவள். துளசியின் கதை மிகவும் பெரிய கதை அவற்றை பின்பு வரும் தொடரில் பார்ப்போம். தற்பொழுது துளசிக்கும் புதனுக்கும் உள்ள சூட்சும வலுவை மருத்துவ ஜோதிட வழியாக உள்ளது என்பதை காணலாம். அவரவர் ஜாதகத்தில் புதனின் தோஷம் அல்லது நீச்சம் கொண்டவர்கள் வாழ்க்கையில் உடல் ரீதியாக, புத்தி சார்ந்த பிரச்னைகள், மனம் சார்ந்த துன்பங்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்ந்து ஏற்படும்.
புதனுடன் மற்ற அசுப கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அவற்றின் தசா புத்திகளில் ஜாதகருக்கு தாக்குப்பிடிக்க முடியாது. முடிந்தவரை மன அழுத்தம் மற்றும் தோல்வியைத் தழுவுவார்கள். அதுதவிர புதன் காரகத்துவம் கொண்ட நோய்களை துளசி மூலிகை வழியாக எவ்வாறு தீர்வு காணலாம் என்று பார்ப்போம். துளசி தாவரவியல் பெயர் ஒசிமம் சன்க்டம், இதுதவிர இந்தியாவின் மூலிகை ராணி மற்றும் தேவ செடி என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது.
துளசி வீட்டிலிருந்தால் அந்த இடத்தையும், வீட்டை சுற்றி நேர்மறை கதிர்வீச்சு ஆற்றலை உற்பத்தி செய்து உடலுக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஒருவரின் வீட்டில் தரித்திரம், கடன் பிரச்னை ஏற்படும்பொழுது, நோயின் தாக்கம் அதிகமாகும்பொழுதும் துளசி வாடிவிடும் அல்லது அழுகிவிடும். அதுவும் துளசியின் வாட்டத்தை வைத்து அந்த வீட்டில் மகிழ்ச்சி மற்றும் தோல்வியை சூட்சுமமாக உணர்த்தும் ஒரு நல்ல வழிகாட்டி. துளசியின் மகிமை விஷ்ணு புராணம், தேவி பாகவதம் நூல்களில் விளக்கியுள்ளது.
புதனின் தோஷம் நீங்க தெய்வ மூலிகை புதன் என்பவர் மிதுனம், கன்னி வீட்டின் அதிபதி. அங்கு திருமால் குடிகொள்ளும் வீடு. அதனால் புதன் என்றவுடனேயே அனைவருக்கும் நன்றாகத் தெரியும் பச்சை மாமலையன் விஷ்ணுவைக் குறிக்கும். உடலில் பச்சை நரம்பு கொண்ட அனைத்தையும் புதனாக சொல்லப்படும்.
புதன் கிரகம் புத்திசாலியான கிரகம், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர். உடலின் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிகள் தூண்டும் நரம்பு மண்டலத்தின் அதிபதி புதன் ஆவார். இவர் சந்திரனின் மகன் என்பதால் புதன் மனதைத் தூண்டி மன ஓட்டமான செயல்களில் ஈடுபடுவர். பச்சோந்தி கிரகமாக ஜோதிடத்தில் கூறப்படும் புதன் யாரோடு சேர்கிறாரோ அந்த கிரக தன்மையை உள்வாங்கிக்கொள்வர். முக்கியமாக ஒரு சில அசுப சேர்க்கை ஜாதகரின் உடலின் இயக்கத்தைச் சற்று நிறுத்திவைக்கவும் தயங்காது.
அதுவும் ஜாதகரின் தசாபுத்திக்கு ஏற்ப நோயின் தாக்கம் மாறுபடும். புதன் மற்றும் அவரின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி அசுப தொடர்பு பெற்றால் புதனின் தசாபுத்திகளில் பிரச்னை அதிகம் இருக்கும்.
அதுவும் 17 வருடங்கள் புதன் தசை வரும் காலம் ஒருசில வருடங்கள் பிரச்னை ஏற்படும். ஜாதக கட்டத்தில் முக்கியமாக 6, 8, 12 பாவங்களில் அசுபர் சேர்ந்தால் அவரின் காரகத்துவம் கொண்ட உறுப்பை புதன் கிரகமானது நோயினை அதிகப்படுத்தும் அதன் தசா புத்திகளில் அதிகப்படுத்தும். இதற்கும் நிறையச் சூட்சுமங்கள் உண்டு. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது புதன் கிரகமே.
தானென்ற புதன் திசையில் சந்திரபுத்தி தாழ்வான் மாதமது பதினேழாகும் தேனென்ற அதன் பலனைச் சொல்லக்கேளு தெரிவையர்கள் கலகமுடன் யிளைப்புசயரோகம் கோனென்ற ராசாவால் குடிகேடு செய்யும் கோதையர்கள் தன்னாலே குடிபாழாகும் வானென்ற வான்பொருளும் வகையில்லாச்சேதம் வையகத்தில் நீதியில்லா மாதரைச்சேர்வாரே. - புலிப்பாணி புதன் திசையில் சந்திர புத்திக்காலத்தில் நோயின் தாக்கத்தைக் கூறுகிறார் சித்தர். பெண்களால் கலகமும், இளைப்பு நோய், சயரோகம் முதலிய நோய் உபாதைகளும் ஏற்படும். அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கே கேடு மற்றும் பெண்களாலும் குடும்பமும் பாழாகும்.
அளவில்லாத செல்வமும் எதிர்பாராவண்ணம் அழியும். மருத்துவ ஜோதிடத்தில் புதனால் ஏற்படுத்தப்படும் நோய்களை துளசி ஒரு அருமருந்து ஆகும். முக்கியமாக நுரையீரல் பிரச்னை, தலை முதல் பாதம் வரையான நரம்பு மண்டல பாதிப்பு, பித்த நாடியில் பிரச்னை, இளமையில் ஏற்படும் நோய், குடல் புண், வாயுவால் தசைப் பிடிப்பு, முடக்கு, வலிப்பு, பக்கவாதம், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், தோல் நோய்கள் (வெண்குஷ்டம், தேமல்), தொழுநோயின் அடிப்படை காரணங்கள் புதன் (சூரியன் சேர்க்கை), திருநங்கையாக மாறுதல், உடலில் உள்ள உறுப்புகளில் பாதிப்பு என்றால் முக்கியமாக முக உறுப்புகள், கழுத்து, தோள்பட்டை,தொண்டை, சுரப்பி, என்று அனைத்து பிரச்னைகளுக்கும் துளசி ஒரு அருமருந்து ஆகும். தீர்வு: புதனின் தோஷம் மற்றும் அவரால் ஏற்படும் அனைத்து பிரச்னைக்கும் ஒரு சிறு வழிகாட்டி துளசி ஆகும்.
இதுதவிர புதனுக்குரிய பச்சைக் காய்கறிகளைச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக பார்த்தால் copper பாத்திரத்தில் நீருடன் துளசியை போட்டுக் குடித்தால், அல்லது இலைகளை மென்று உண்டால் அல்லது சருமத்தில் மஞ்சள் உடன் பூசிக்கொண்டாள் உடலில் உள்ள அனைத்து நோய்களும் விட்டு அகலும். துளசி அதிக நேரம் Oxygen வெளியேற்றும். அதனால் வாஸ்துப்படி சூரிய ஒளி பட்டு துளசியின் காற்று உடலில் நல்ல மாறுபாடுகளைக் கொடுக்கும் என்பது உண்மை. புற்றுநோய்க்கும் துளசி ஒரு அருமருந்தாகக் கூறப்படுகிறது.
மூதாதையர்கள் வழியாக இன்றும் நாம் தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரத்தில் நீரில் துளசியைப் போட்டு தீர்த்தமாகக் குளிர்கால மழைக்காலங்களில் அதாவது புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பெருமாள் கோவில்களில் தீர்த்தமாகக் கொடுக்கப்படுகிறது. இதுவும் கபத்தைக் கட்டுக்கொள் கொண்டுவர உதவும்.
இதுதவிர ஒன்றோடு ஒன்று பின்னிய பச்சை நரம்பின் காரகன் புதன் சூரியன் உடன் சேர்வது நன்று. உடலின் நரம்பின் இயக்கம் copper மற்றும் சூரிய ஒளி (வைட்டமின் D) சேர்க்கை என்பது தோல் புத்துணர்ச்சிக்கும் உறுப்புகளின் இயக்கத்திற்கும் முக்கிய தேவை என்பது அறிவியல் ஜோதிட ரீதியாகத் தெரிகிறது. துளசி மாடத்தில் அருகில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும். மூளையின் வேலை எவ்வளவு செயல்படுகிறதோ அதற்கேற்ப நல்ல சுற்றுச்சூழலில் யோகா பயிற்சி தேவை.
முக்கியமாக துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசி தீர்த்தம், துளசி இலை மூலம் தோல் நரம்பு மண்டலங்களை சீராக்கும், உறுப்புகளை சீர்படுத்தவும் துளசி ஒரு முக்கிய காரணி.
துளசி என்ற ஒன்று நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial resistance), பாக்டீரியால் எதிர்ப்பு (antibacterial), எதிர்ப்பு அழற்சி (anti inflammatory) வைரஸ் தடுப்பு பண்புகளை, வாத-பித்த-கப எதிர்ப்பு மற்றும் கீமோ-தடுப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. துளசியில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே மருத்துவ தத்துவம் மற்றும் தொற்று நோய் கொண்ட வைரஸ்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொண்டவை. துளசி வழிபாடு நன்மை முக்கியமாக வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம்.
துளசி சுற்றி தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம். துளசி அருகில் செல்பவர்கள் மாமிசம் உட்கொள்ளக்கூடாது முக்கியமாகப் பெண்களின் தீட்டு, எச்சில் ஆகாது. வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியுடன் ஒரு புது காற்று பரவும், தரித்திரம் அகலும் மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வருவாள்.
துளசியில் மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அனைத்து தேவதைகளும் குடிகொண்டு உள்ளார்கள். துளசியை மூன்று நாள்கள் பூஜையில் வைக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துவாதசியில் துளசியைப் பறிக்கக் கூடாது. விஷ்ணுவின் மனைவியாக பிருந்தா என்கிற துளசியை கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி தேவியை மணந்ததாக ஒரு ஐதீகம். அன்றைய தினத்துக்கு 'பிருந்தாவன துவாதசி ' என்று வழிபடுவார்கள்.
கர்நாடகாவில், சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றிச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
தென் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக வழிபடுவார்கள். துளசியை தினமும் வழிபட்டால் பில்லிசூனியம் அகலும், திருமணம் கைகூடும், மனக்குழப்பம் குறையும், சுப நிகழ்ச்சிகள் நிகழும், புதன் தோஷம், சத்ரு தொல்லை, பித்ரு தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் உங்களை விட்டு விலகும்.
ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே
துளசி பத்ராய தீமஹி
தந்நோ துளசீ ப்ரசோதயாத்