மீண்டும் லலிதா ஜூவல்லரி கடையில் நடந்த கொள்ளை; 5 கிலோ தங்கம் கடத்தல்.. திருடனை பிடிக்க தீவிரம்!
பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியிலிருந்து ஊழியர் ஒருவர் 5 கிலோ தங்கத்தை திருடிக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் உள்ளது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில் தங்க நகைகளை எடைபோடும் பணியின்போது 5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் சிங் பாலிஷ் செய்த நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், தப்பியோடிய பிரவீன்குமார் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் ராஜஸ்தான் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் கைவரிசை நடத்திய நிலையில், தற்போது ஊழியரே திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.